×

ஞாயிறு முழு ஊரடங்கால் குற்றால அருவிகள் வெறிச்சோடியது

தென்காசி : ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக குற்றாலம் அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தடுப்பூசி முகாம்கள், பூஸ்டர் தடுப்பூசி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி என பல்வேறு வகைகளில் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

தடையை மீறி யாரும் குளிக்காதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஜனவரி மாதத்தின் இறுதியை எட்டி விட்ட நிலையிலும் குற்றால அருவிகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் குறைவாகவும் பெண்கள் பகுதியில் பாறையை ஓட்டினாற்போன்று சிறிதளவு தண்ணீரும் விழுகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் ஓரளவு தண்ணீர் விழுகிறது. முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காலை 5 மணியுடன் நிறைவடையும் நிலையில் அருவிகளில் இன்று காலை 6 மணி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர்.

Tags : Courtallam Falls , Tenkasi: Courtallam Falls was deserted due to a complete curfew on Sunday.
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...